Home » » அவுஸ்திரேலிய அரசிடம் நஷ்ட ஈடு கோருகின்றனர்.

அவுஸ்திரேலிய அரசிடம் நஷ்ட ஈடு கோருகின்றனர்.

Written By Unknown on Tuesday, July 29, 2014 | 6:09 AM

அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற நிலையில்,  சுங்கத் திணைக்களத்தின் கப்பலொன்றில்  பல வாரங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த 157 புகலிடக் கோரிக்கையாளர்கள்  தாம் நடத்தப்பட்ட விதத்துக்காக நஷ்ட ஈடு கோருவர் என மேற்படி புகலிடக் கோரிக்கையாளர்களின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

50 சிறார்கள் உட்பட  157 பேர் கடந்த மாதம் இந்தியாவின் புதுச்சேரியிலிருந்து படகில் சென்ற போது அவுஸ்திரேலிய படையினரால் இடைமறிக்கப்பட்டு அந்நாட்டு சுங்கக் கப்பலொன்றில் பல வாரங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். கடந்த சனிக்கிழமையே அவர்கள் கொகோஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேற்படி புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து மெல்பேர்ன் மேல் நீதிமன்றத்தில்  85 பேரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நஷ்ட ஈட்டுக்கான கோரிக்கையையும் உள்ளடக்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேற்படி புகலிடக் கோரிக்கையாளர்களை சுமார் ஒரு மாத காலம் கப்பலில் தடுத்துவைத்தமை சட்ட ரீதியானதா என்பதையும் அது சட்டரீதியானது அல்லவெனில், நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமா என்பதையும் நீதிமன்றம் ஆராயும் என அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேற்படி புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்தியாவில் நீண்டகாலமாக வசித்தவர்கள் எனவும் அவர்கள் பொருளாதார குடியேற்றவாசிகள் எனவும் தெரியவருவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிஷன் கூறியுள்ளார்.

அப்படகு  பாதுகாப்பான நாடான இந்தியாவிலிருந்து வந்தது.  வேறு எங்கும் அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் இலங்கையிலிருந்தோ, ஆப்கானிஸ்தான் அல்லது அதைப்போன்ற வேறு நாட்டிலிருந்து வரவில்லை" என அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment




விளம்பரங்கள்

POPULAR POST

Powered by Blogger.